"என் பிள்ளைய விட்டுட்டேன்.. உங்க பிள்ளைய காப்பாத்திக்கோங்க" - கதறி துடித்த சிறுவனின் தந்தை
கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த குருவிஷ்ணு என்ற பிஞ்சு குழந்தையின் துயர மரணம், தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது. வெறும் இரண்டே வயதான அந்தக் குழந்தை, தன் தந்தையுடன் ஆர்வத்தோடு பரப்புரைக் கூட்டத்திற்குச் சென்றதுதான், கோரமான முடிவாகிவிட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறிப் போனது அந்தக் குழந்தை... கண்முன்னே தன் செல்ல மகன் உயிருக்குப் போராடுவதைக் கண்ட தந்தை, ஒரு நொடி கூட தாமதிக்காமல், குருவிஷ்ணுவை தன் கைகளில் ஏந்தியபடி மருத்துவமனை நோக்கி ஓடிய காட்சி, அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சையும் கலங்கடித்தது.
எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று கதறியழுதபடி, மருத்துவமனையின் நடைபாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த அந்தத் தந்தையின் ஓலம், எல்லோர் காதிலும் எதிரொலிக்கிறது. ஒரு தந்தையின் ஆற்றாமையும், கையறு நிலையும் ஒருங்கே வெளிப்பட்ட அந்தக் கணம், துயரத்தின் உச்சம். எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, உடற்கூறு ஆய்வு முடிந்து மகனின் உடல் கொண்டுவரப்பட்டபோது, தாயின் கதறல் விண்ணைப் பிளந்தது... தன் மழலையின் அசைவற்ற உடலைக் கண்டு தாய் அழுத கண்ணீர், காண்போரின் கண்களையும் குளமாக்கி, இந்தக் கோரச் சம்பவத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையையும் உணர்த்தியது...
குழந்தையின் தந்தை பேசுகையில், "என்னைப்போல் பிள்ளையை யாரும் விட்டு விடாதீர்கள். உங்கள் பிள்ளையை காப்பாற்றி வைத்துக்கொள்ளுங்கள். என் பிள்ளை இறந்ததே கடைசியாக இருக்கட்டும்" என்றார்.
குழந்தையின் தந்தை பேசியது வீடியோவில்..