சுகேஷை எனக்குத் தெரியும்: ஒப்புக்கொண்டார் தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகரை, தனக்குத்தெரியாது என்று சொல்லி வந்த டிடிவி தினகரன் இப்போது தெரியும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் 3 ஆவது நாளாக நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் டெல்லி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை பெற உதவிசெய்ய முன்வந்த அதிகாரிகள் குறித்து 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் நள்ளிரவில் அவர் காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சுகேஷை எனக்குத்தெரியாது என்று மறுத்து வந்த தினகரன் இப்போது அவரைத் தெரியும்என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விசாரித்துவருகிறோம்’ என்றனர்.
நான்காவது நாளாக இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை தினகரனுக்குஉத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் குற்றப்பிரிவு போலீசார்விசாரணை நடத்தினர்.
அவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் வாங்கியதாக கைதாகியுள்ள சுகேஷ் சந்திராவின் காவல் இன்றுடன் முடிவடைவதால்,நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய சூழல் டெல்லி காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.