நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி
தருமபுரியில் ஆழ்துளை கிணறுகளைச் சுற்றி குளங்கள் அமைத்து நிலத்தடி நீரை உயர்த்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு, காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. மேலும், இங்கு காலியாக உள்ள இடத்தில், காவலர்களின் பயன்பாட்டிற்காக ஆறு ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டன. ஆனால், மழையின்றி நிலத்தடி நீர் குறைந்து அவை வற்றி காணப்பட்டது.
இந்த நிலையை போக்க, அவ்வப்போது பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த சூழலில் மொத்தமுள்ள ஆறு ஆழ்துளை கிணறுகளில் மிகவும் வறண்டு போயுள்ள மூன்றை தேர்வு செய்து, அதில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். முதலில் ஆழ்துளை கிணறுகளை சுற்றி சுமார் 5 அடி ஆழத்திற்கு குளம் அமைத்துள்ளனர். இவ்வாறு அமைக்கப்பட்ட குளங்களில் தேங்கும் மழை நீரானது, ஆழ்துளைகள் வழியாக நிலத்தடிக்கு செல்கிறது. மேலும் அங்குள்ள திறந்தவெளி கிணற்றிலும் மழை நீர் சென்று சேரும் விதமாக பாதை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.