“இப்போ மட்டுமில்ல.. எப்பயும் முடி வெட்டமுடியாது” - பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுத்த உரிமையாளர்

அரூர் அருகே பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவத்தில் கடையின் உரிமையாளர் தந்தை, மகன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கீரைப்பட்டி முடி திருத்தும் நபர்
கீரைப்பட்டி முடி திருத்தும் நபர்pt web

செய்தியாளர் - விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்வரன் என்பவர், யோகஷ் என்ற பெயரில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். இங்கு யோகேஷ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முடி திருத்தம் செய்ய, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தபோது, யோகேஷ்வரன், "நீ எந்த ஊரு?" என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தனது ஊரை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்பு கடையின் உரிமையாளர் யோகேஷ்வரன், “உங்களுக்கு முடி வெட்ட முடியாது, வேறு எங்கேயாவது வெட்டிக்கொள்” என்று திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த இளைஞர் தனது வீட்டிற்கு சென்று, தன் நண்பர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து, முடி திருத்தும் கடைக்கு சென்று, “என்ன காரணத்திற்காக முடி வெட்ட முடியாது” என்று கடை உரிமையாளர் யோகேஷ்வரனிடம் கேட்டுள்ளனர். அப்போது யோகேஷ்வரன், “உங்களுக்கு (சமூகத்தை குறிப்பிட்டு பேசும் வகையில்) முடி வெட்ட முடியாது அவ்வளவுதான்” என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

பின்பு யோகேஷ்வரனின் தந்தை கருப்பன் (எ) சென்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடமும் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது, “உங்களுக்கு இப்போது மட்டுமல்ல, காலம் காலமாக முடி வெட்டுவதில்லை” தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர், “இப்போதும் முடி வெட்ட முடியாது, எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை” என்று கூறியுள்ளார்.

அப்போது இளைஞர்கள் கருப்பன் (எ) சென்னையனை பார்த்து, “சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருக்கின்ற நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா, இதைதான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்களா?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.

அதன் பிறகு நேற்று பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து முடிதிருத்தும் கடை உரிமையாளர் யோகேஷ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சென்னையன், ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததால், யோகேஸ்வரன் மற்றும் தந்தை கருப்பன் (எ) சென்னையன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவம் அரூர் பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்ததும், மாட்டிறைச்சியை பேருந்தில் எடுத்து வர கூடாது என சாதிய பாகுபாடுகள் காட்டியதும் அரூர் பகுதியில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com