தருமபுரி: `பட்டா நிலத்தை இலவசமா எழுதி தரணும்’- மறுத்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை அமைக்க இலவசமாக நிலம் தர மறுத்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
ஜக்கசமுத்திரம் அருகே உள்ள முருக்கல்நத்தம் கிராமத்தில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்த அதிகாரிகள், சாலை அமைக்க கோரும் இடம் பட்டா நிலம் என்று கூறியுள்ளனர். அதனை அரசின் பெயருக்கு மாற்றி கொடுத்தால் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இலவசமாக பட்டா நிலத்தை கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்த 6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க, சாலையில் கற்கள் வைத்து அடைத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.