தருமபுரி | கடத்தி ஆடையை கிழித்து அட்டூழியம்.. காதல் விவகாரத்தில் இளைஞரின் தாய்க்கு நடந்த கொடூரம்!
செய்தியாளர்: விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவரது மகன் சுரேந்தர் (24), கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் பவித்ரா (23). இவர் பட்டதாரி பெண். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சுரேந்தர், பவித்ரா இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர் காலை வரை வீட்டிற்கு வரவில்லை. அதேபோல் பவித்ராவும் வீட்டிற்கு வரலில்லை. இதையடுத்து சுரேந்தர் தான் தனது மகள் பவித்ராவை அழைத்து சென்றிருப்பார் என்ற கோபத்தில், தனது உறவினர்களுடன், சுரேந்தர் வீட்டுக்கு இன்று காலை சென்ற பவித்ராவின் தந்தை, சுரேந்தரின் தந்தை செல்வம் அவரது தாய் முருகம்மாள் ஆகியோரிடம் பவித்ரா எங்கே என்று கேட்டு அடித்து சட்டையை கிழித்ததாதக் கூறப்படுகிறது. அப்போது அவரை தடுத்த முருகம்மாளை அடித்து, கணவன் கண்முன்னே புடவை இழுத்து, துன்புறுத்தியதாகவும், அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜூன் சுப்பிரமணி, ஓடி வந்து தடுத்தபோது, அவரையும் அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து முருகம்மாளை அந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அருகில் உள்ள வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று சுரேந்தர் இருக்கும் இடத்தை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை அரை நிர்வாணப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்விடுவதாக கத்தியக் காட்டி மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து முருகம்மாவை மது குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும் தன் மகன் இருக்கின்ற இடம் தனக்குத் தெரியாது தன்னை விட்டு விடுங்கள் என முருகம்மாள் அவர்களிடம் மன்றாடியுள்ளார். ஆனாலும், அவர்கள் விடாமல் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்த தகவல் தெரிந்ததை அடுத்து அந்த கும்பல், முருகம்மாளை வனப் பகுதியில் இருந்து அழைத்து வந்து, மொரப்பூர் சாலையில் விட்டுள்ளனர். மேலும் இங்கு நடந்ததை காவல்துறையிடம் தெரிவித்தால், வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவோம். உன் மகன் எங்கு இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் அந்தப் பெண்ணையும் உன் மகனையும் கொலை செய்து விடுவோம், என மிரட்டி உள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், முருகம்மாளை அழைத்துச் சென்று, மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
முருகாம்மாளை கொடுமை படுத்தியதாக பூபதி, கார்த்திக், பூபதி மனைவி செல்வி, சரவணன், மாயன், வேலு, கலையரசன் உள்ளிட்ட 20 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.