தருமபுரி மாவட்டம் அரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தடம் எண் 16 அரூர் - கடத்தூர் வரையிலும், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரையிலும் இயக்கப்படுகிறது. அப்படி இன்று காலை பாப்பிரெட்டிபட்டியில் இருந்து அரூர் வந்த அரசு பேருந்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது அரசு பேருந்து அரூர் நான்கு ரோடு பேருந்து நிலையம் வந்தபோது திடீரென நின்று விட்டது.
பழைய பேருந்து என்பதால், செல்ப் மோட்டார் பழுதாகி இருந்தது. இதனால் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள் அதை தள்ளி ஸ்டார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தை தள்ளிச் சென்றனர். தொடர்ந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றதும், பேருந்து ஸ்டார்ட் ஆனது. இதனையடுத்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றனர்.
அரூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால், அடிக்கடி இது போன்று பாதி வழியில், பழுதாகி நின்று விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.