இளம் காதல் ஜோடி மாயம் : இளைஞர் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்?

இளம் காதல் ஜோடி மாயம் : இளைஞர் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்?

இளம் காதல் ஜோடி மாயம் : இளைஞர் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்?
Published on

தர்மபுரியில் காதல் விவகாரத்தில் சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்காவைச் சேர்ந்தவர் விஜய்(24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரியா(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இரண்டு வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் இருவரையும் காணவில்லை. இருவரும் ஒன்றாக ஊரைவிட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் பிரியாவின் குடும்பத்தினர், விஜய் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் மினிட் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியின்படி, விஜய் மற்றும் பிரியா இருவரும் ஊரைவிட்டு சென்றவுடன் பயத்தினால் விஜய் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்களது பாதுகாப்புக்காக பெங்களூருக்கு சென்றுவிட்டனர்.  இருப்பினும், அவர்களை பிரியாவின் குடும்பத்தினர் கண்டுபிடித்து தர்மபுரியில் உள்ள தாலபள்ளத்திற்கு அழைத்து வந்தனர். ஜூலை 24 ஆம் தேதி விஜய் குடும்பத்தினர் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதுவும் ஊர் மக்கள் முன்பு மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். 

இதுகுறித்து செக்கரபெட்டியைச் சேர்ந்த விஜயின் தாத்தா குமார் போலீசில் ஜூலை 30 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில், “தாலப்பள்ளத்தை சேர்ந்த பாஸ்கர், தர்மலிங்கம், செந்தில், கனகராஜ் மற்றும் ஆரோக்யராஜ் ஆகியோர் என்னுடைய வீட்டிற்கு வந்தனர்.

அப்போது, என்ன வேண்டும் என அவர்களிடம் என்னுடைய மனைவி கேட்டார். அதற்கு, சரமாரியாக திட்டிக் கொண்டே பிரியா எங்கு என கேட்டனர். நாங்கள்தான் பிரியாவை மறைத்து வைத்துள்ளதாக கூறினர். எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியபோது, என்னுடைய கன்னத்தில் தர்மலிங்கம் அறைந்தார். பின்னர், செந்தில் மற்றும் கனகராஜ் என்னை அடித்து காருக்குள் கொண்டு சென்றனர். என்னை விட்டுவிடுமாறு என்னுடைய மனைவி கேட்ட போது, போலீசில் தகவல் சொன்னால் என்னை கொன்றுவிடுவோம் என மிரட்டினர். பின்னர், தாலபள்ளத்தில் உள்ள ராஜா என்பவரின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றனர்.

அங்கு ஏற்கனவே விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரை அழைத்து வந்திருந்தனர். பாஸ்கர் மற்றும் தர்மலிங்கம் எனது மகளின் முடியை பிடித்து அடித்து துன்புறுத்தினார். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அவர்கள் அடித்தனர். இந்த தாக்குதலை தடுக்க முயன்றவர்களையும் அவர்கள் மிரட்டினர். அடுத்தநாள் அவர்களை காரில் ஒகேனக்கலுக்கு அழைத்துச் சென்றனர். 10 நாட்களுக்குள் பிரியா திரும்பவில்லை என்றால் அனைவரையும் கொன்றுவிடுவோம் என மிரட்டினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் துரைராஜ் கூறிய போது, “குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பெண்ணின் உறவினர்கள். நாங்கள் முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளோம். விசாரணை சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாங்களும் விஜயின் தாத்தா குமார் அளித்த புகாரை எடுத்துக் கொண்டுள்ளோம். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com