\
By Election
By ElectionPT

மாறிவரும் இடைத்தேர்தல் அரசியல்.. தாராபுரம் – மதுராந்தகம் சொல்லும் புதிய பாடம்!

ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் பலத்தை வெளிப்படுத்த முயன்ற நிலையில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு முக்கியமான வாய்ப்பாகவும் இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - ஆனந்தன்

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம், ஆர்.கே.நகர் போன்ற தேர்தல்கள் நம் நினைவுக்கு வருகின்றன. திருமங்கலம் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த விவாதத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது. அதன்பிறகு 2017-இல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. அதேபோல் 2016 பொதுத்தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்களால் தேர்தல் முதலில் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்தல் செயல்முறையே ரத்து செய்யப்பட்டது.

தாராபுரம்
தாராபுரம்புதிய தலைமுறை

ஆனால் தற்போது நடைபெற்றுள்ள தாராபுரம்–மதுராந்தகம் இடைத்தேர்தல், கடந்தகால இடைத்தேர்தல்களில் இருந்து மாறுபட்ட அரசியல் சூழலில் நடைபெற்றுள்ளது. ஆட்சி அமைத்த பின்னர் உருவான புதிய கூட்டணி, சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களம், இடதுசாரிகளின் தனித்துப் போட்டி என பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் பணப்பட்டுவாடா குறித்த கண்காணிப்பு. பொதுவாக இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் எவ்வளவு பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர், எத்தனை புகார்கள் பெறப்பட்டன என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகும்.

மதுராந்தகம்
மதுராந்தகம்புதிய தலைமுறை

இந்த தேர்தலிலும் கண்காணிப்பு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் கடந்த காலங்களில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் அல்லது ஆர்.கே.நகர் தேர்தல்களில் ஏற்பட்டதைப்போல, இந்த இடைத்தேர்தலில் நடைபெற்றதா என்று கேட்டால் இல்லை என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டும். இதனால் இந்த தேர்தல் பணப்பட்டுவாடா சர்ச்சையை மட்டும் மையமாகக் கொண்ட தேர்தலாக இல்லாமல், புதிய அரசியல் அணுகுமுறைகள், மாறிவரும் கூட்டணி கணக்குகள் மற்றும் அரசியல் கட்சிகளின் புதிய தேர்தல் உத்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்திய தேர்தலாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் பலத்தை வெளிப்படுத்த முயன்ற நிலையில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு முக்கியமான வாய்ப்பாகவும் இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. குறிப்பாக ஆளும் தரப்புக்கு ஆதரவு அளித்திருந்த கட்சிகள் தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்டிருப்பது, தமிழக அரசியலில் உருவாகி வரும் புதிய அரசியல் சூழலை காட்டுகிறது.

By Election
By ElectionPT

இறுதியில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரியும். ஆனால், கடந்தகால இடைத்தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, தாராபுரம்–மதுராந்தகம் தேர்தல் பணப்பட்டுவாடா சர்ச்சைகளைத் தாண்டி, கூட்டணி அரசியல், புதிய கட்சிகளின் எழுச்சி மற்றும் வாக்காளர்களின் அரசியல் முடிவு ஆகியவற்றை முன்னிறுத்திய ஒரு வித்தியாசமான தேர்தலாக அமைந்துள்ளது. வெற்றி யாருக்கு என்பது அரசியல் கட்சிகளுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் வாக்காளர்கள் தங்களது வாக்கின் மூலம் வழங்கும் தீர்ப்பே ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.

By Election
தாராபுரம், மதுராந்தகம் வாக்குப்பதிவு நிறைவு!! வாக்கு சதவீதம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com