பேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்
தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் கட்அவுட், பிளக்ஸ் பேனர் செலவிற்கு பதிலாக ஆதிதிராவிட மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நெல்லை சட்டம் & ஒழுங்கு காவலர் துணை ஆணையர் சரவணன், “நடிகர் தனுஷ் நடித்த “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாவதை முன்னிட்டு கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக பாளையங்கோட்டை ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன். கடந்த வாரம் இவ்விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவர்களது தேவைகளை (மேஜை, நாற்காலிகள, மைக், ஆம்ளிஃபையர், நூலகத்திற்கு புத்தகம்) கூறினர்.
அதனை நற்பணி இயக்கத்தினரிடம் தெரிவித்த போது நான்கே நாட்களில் அனைத்தையும் செய்து கொடுத்தனர். நெல்லை மாநகர தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தர முன்வந்த ரசிகர்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றி. நிகழ்வை ஒருங்கிணைத்த விடுதி காப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு நன்றி. இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது மேல்” என தெரிவித்துள்ளார்.