தனுஷ் வழக்கு: மேல் முறையீடு செய்ய தம்பதி முடிவு
தனுஷ் தங்களின் மகன் என கூறி மதுரை மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கதிரேசன் - மீனாட்சி தம்பதி கூறியுள்ளது.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பல கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று காலை மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என கதிரேசன் தம்பதி தெரிவித்துள்ளது.