’’நான் உன் ரசிகன்’’ - மாணவனிடம் நெகிழ்ந்துபோன டிஜிபி சைலேந்திர பாபு

’’நான் உன் ரசிகன்’’ - மாணவனிடம் நெகிழ்ந்துபோன டிஜிபி சைலேந்திர பாபு
’’நான் உன் ரசிகன்’’ - மாணவனிடம் நெகிழ்ந்துபோன டிஜிபி சைலேந்திர பாபு

சாலை விபத்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்த பள்ளி மாணவனின் ரசிகரானார் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழகத்தில் கடந்தாண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளது. அதில் 14,250 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தாண்டு சாலை விபத்துகளை குறைப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு முயற்சியாக சென்னை எழும்பூர் காவலர் அருங்காட்சியகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. குழந்தைகள் பெற்றோர்களுக்கு தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை விபத்துகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மணவர்களின் கானா பாடலை டிஜிபி சைலேந்திர பாபு கண்டு மகிழ்ந்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களிடம் உரையாடும்போது, "சாலை விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்றால் எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படும் என கேள்வி கேட்டார். அதற்கு மாணவர் சந்தோஷ், வாழ்க்கையே பறிபோய்விடும் எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இழப்புகளும் குறித்தும் விரிவாக பதிலளித்தார். இதனைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த டிஜிபி சைலேந்திரபாபு, "நான் உன் ரசிகன்" என மாணவன் சந்தோஷிடம் தெரிவித்து பரிசு வழங்கியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திர பாபு, பள்ளி மாணவ, மாணவிகளிடையே போக்குவரத்து மற்றும் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறப்பான ஒன்று என தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 55 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 14,250 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் 1,026 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி சுமார் 25ஆயிரம் பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறிய அவர், சாலை விபத்துகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் உயிர்போக தலைக்கவசம் அணியாமல் இருப்பது மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் தலைக்கவசம் அணிவதன் மூலம் பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க 952 இருசக்கர வாகன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதிகளுக்கு 100 இருசக்கர ரோந்து வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மாணவ, மாணவிகளிடம் தலைக்கவசம் அணியாவிட்டால் பெற்றோர்களுடன் வாகனத்தில் செல்ல கூடாது எனவும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என வற்புறுத்த வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சாலை விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள், போக்குவரத்து விதிகள் உள்ளிட்டவை பள்ளி மாணவிகள் உருவாக்கி படைப்புகளை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்த்து பாராட்டினர். மேலும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் கையாலேயே ஹெல்மெட்கள் வழங்கவைத்து போக்குவரத்து விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி அனைவரது வரவேற்ப்பையும் பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com