“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது”- டி.ஜி.பி சைலேந்திரபாபு

சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்ததில் அவை பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளது என தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருக்கிறார்.
“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது”- டி.ஜி.பி சைலேந்திரபாபு

“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது” என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை லயோலோ கல்லூரியில் நடந்த ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்’ என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக லயோலா கல்லூரியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “புத்தகம் மற்றும் பேனா மிகப்பெரிய ஆயுதம். மாணவர்கள் அதை நன்கு பயன்படுத்த வேண்டும். பெண்கள் படிப்பை தேர்வு செய்வதில் சுயமாக முடிவெடுத்து, தங்கள் படிப்புகளை தாங்களே தேர்வு செய்ய வேண்டும். சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்ததில் அவை பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளது என தெரியவந்துள்ளது. அதேபோல சிறு நகரங்களில் ஈரோடு, கரூர், திருச்சி போன்ற 10 மாவட்டங்களிலும் நாங்கள் ஆய்வுசெய்தோம். அவையும் பெண்கள் பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று பெண் வன்கொடுமை சட்டதின் கீழ் 14,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் 22,413 பதிவு செய்யப்பட்டு உள்ளன. வரதட்சணை கொடுமையாக 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை 21 கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி கொடுத்து உள்ளோம். மேலும் பல குற்றங்களில் கடும் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் காவல் நிலையங்களாக, 242 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் அனைத்திலும் பெண்களே பணி செய்து வருகின்றனர்.

காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக இதுவரை 88,426 புகார் பெற்று விசாரணை செய்யப்பட்டுள்ளன. இதில் காணாமல் போன 43,509 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com