தமிழக கடற்கரைகளில் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூட தடை - டிஜிபி சைலேந்திர பாபு
புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
ஒமைக்ரான் தொற்று பரவலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடைவிதிப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பர் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது; மீறினால் கைது செய்யப்படுவார்கள், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரவர் குடும்பத்தினருடன் வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திருட்டு சம்பவங்களை தவிர்க்க வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லும்படியும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் இரு சக்கர வாகனத்தை தர்வித்துவிட்டு ரயில் அல்லது பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.