டிஜிபி ராஜேந்திரனை விமர்சித்து பேனர் வைத்தவர் கைது
சென்னையில், காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் டிஜிபி ராஜேந்திரனை விமர்சித்து பேனர் வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
குட்கா அனுமதிக்கு லஞ்சம் பெற்ற புகாரில் டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் இந்த பேனர் வைத்திருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேனரை அகற்றி செந்தில்முருகனை கைது செய்தனர். டிஜிபி ராஜேந்திரனை பதவியிலிருந்து நீக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபியாக இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான திமுக, சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.