சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமனம்
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது. குட்கா, பான்மசாலா விவகாரத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பணி மூப்பு அடிப்படையில் முதல் 5 இடங்களில் இருக்கும் டி.கே ராஜேந்திரன், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அதை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக, டி.கே. ராஜேந்திரனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
இதன்படி டி.கே.ராஜேந்தின், மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பதவி வகிப்பார். புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாகசாகர் ராவை சந்திக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மும்பை சென்றுள்ளார்.