“வழிபாடு செய்ய சிலையை கொடுங்கள்”: பக்தர்கள் குமுறல்

“வழிபாடு செய்ய சிலையை கொடுங்கள்”: பக்தர்கள் குமுறல்

“வழிபாடு செய்ய சிலையை கொடுங்கள்”: பக்தர்கள் குமுறல்

நெல்லையில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர் கோயிலில் பல ஆண்டுகளாக பக்தர்களின் வழிபாட்டிற்கு சிலையை தராமல் உடைந்திருப்பதாகக் கூறும் அறநிலையத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

நெல்லை பேட்டை அருகே விவிகே தெருவில் நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான பால்வண்ணநாதர் கோயில் அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்கு அடுத்தப்படியாக நெல்லையில் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. கோயிலுக்கு பாத்தியப்பட்ட 18 உற்சவர் ஐம்பொன் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் நெல்லையப்பர் கோயில் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா, திருவாதிரை, நவராத்திரி, பரிவேட்டை, உற்சவ சஷ்டி, விசாகம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்படி நடைபெறும் விழா நாட்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிலைகள் பாதுகாப்புடன் வழங்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படுவது வழக்கம். 

இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 18 சிலைகளும் கொண்டுவரப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, அப்போது ஆறுமுகநயினார் சுவாமி ஐம்பொன் சிலைகள் மட்டும் சிறிய அளவில் சேதமடைந்திருந்தது. இதனையடுத்து நடந்த பல்வேறு சிறப்பு வழிபாட்டு காலங்களில் ஆறுமுகநயினார் சுவாமி சிலையை மட்டும் வழங்குவது இல்லை. கடந்த 14 வருடமாக ஆறுமுகநயினார் சிலையின்றி வெற்று பீடமாக இருப்பதால் பொதுமக்கள் வழிபாடு குறைந்துள்ளதாக கூறுகின்றனர். சிலையை பொதுமக்களும்,பக்தர்களும் இணைந்து நிதித் திரட்டி சீரமைத்து பராமரித்து கொள்கிறோம் என்று பலமுறை மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என  புகார் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக பக்தர்கள் பலமுறை தகவல் கேட்டும் தகவல் இல்லாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கேட்டுள்ளனர். மேலும் வருகிற வைகாசி விசாகத்திற்கு முன்பாக சீரமைத்து பக்தர்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடன் நடந்து வருவதாகவும் அவர்கள் குற்றமும் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com