ஐ-போனில் முருகன் யாரிடம் பேசப் போகிறார்? – பக்தர் உண்டியலில் போட்ட செல்போன் குறித்து சீமான் கருத்து
செய்தியாளர்: பிருந்தா
திருச்சியில் அண்ணனுடன் ஆயிரம் பேர் என்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
திருப்போரூர் கோயில் உண்டியலில் பக்தர் தவறவிட்ட ஐ-போனை கோயிலுக்கே சொந்தம் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது எப்படி, சிரிக்கிறதா அழுவதா என தெரியல. ஒருவேளை எங்கள் இறை முருகன் ஐ-போனில் யாரிடம் பேச ஆசைப்பட்டார் என்று தெரியவில்லை. வள்ளியிடம் பேசுவார் போல.
உண்டியலில் காணிக்கை போட்டவராவது செல்போனை இடது கையில் வைத்துக் கொண்டு காணிக்கையை போட்டிருக்கலாம். அவரது செல்போன் என உறுதி செய்யப்பட்டால் அதை கொடுப்பதை விட்டு விட்டு அதில் என்ன விதி இருக்கிறது என்று தெரியவில்லை. செல்போனை விற்று உண்டியலில் காணிக்கையாக போடப் போகிறார்களா என்றும் தெரியவில்லை. எல்லாம் படம் பார்த்து கெட்டுப் போவது தான்.
பாளையத்தம்மன் படத்தில், கோயில் உண்டியலில் போட்ட குழந்தை கோயிலுக்கே சொந்தம் என்பது போல, ஒரு வெடிகுண்டை போட்டு விட்டார் அவர். அந்த குண்டு பத்து நாள் கழித்து வெடிக்கும் பொழுது, இல்ல இல்ல குண்டு எங்களுக்கு தான் சொந்தம் என சொல்லுவார்களா. ஐயோ காலக்கொடுமை என்றார் சீமான்.