தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடன்!
தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டி 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கியே நடைமுறை மூலதன செலவுகளும், புதிய மின் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
மின் கொள்முதலுக்கே அதிகம் செலவிடுவதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வரவை விட செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் பல்வேறு வட்டி விகிதங்களில் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60 லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மின் வாரியம் வட்டிக்காக செலவு செய்த தொகை 1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பதினாறாயிரத்து நானூற்று நாற்பது கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 சர்க்கரை ஆலைகளில் இணை மின் நிலையம் அமைக்கும் பணியை மின் வாரியம் 2010 இல் தொடங்கியது. இத் திட்டத்திற்கான செலவு தொள்ளாயிரத்து அறுபத்தைந்து கோடி ரூபாயாகும். இதுவரை 6 ஆலைகளில், மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் பணிகள் முழுமை பெறவில்லை.ஆனால், திட்டத்திற்கு வாங்கிய கடனை விட அதிகமாக இதுவரை ஆயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.