17 ஆண்டுகள் பேராசிரியர் பணி டூ உயர்கல்வித்துறை அமைச்சர்.. யார் இந்த பொன்முடி?

அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி pt web

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவருக்கு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 13 மணி நேரமாகச் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை - சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வீட்டின் முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தைத் திறந்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த 13 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உட்பட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி யார், அவரின் அரசியல் பயணம் எங்கே தொடங்கியது உள்ளிட்ட விஷயங்களை இங்கே பார்ப்போம்.

பேராசிரியர் பணி

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் 1950-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தவர் பொன்முடி. பொன்முடியுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எட்டுப் பேர். தாய், தந்தை இரண்டு பேரும் ஆசிரியர்கள். அமைச்சர் பொன்முடி எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்ட மேற்படிப்புகளுக்குச் சொந்தக்காரார்... கல்லூரியில் படிக்கும்போதே, தி.மு.க. மாணவரணியில் இணைந்தார் பொன்முடி. அவருக்கு, மாநில மாணவரணி துணைச்செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன்., தென்னாற்காடு மாவட்ட மாணவரணியின் முக்கியப் பிரமுகர் ஏ.ஜி.சம்பத் போன்ற தி.மு.கவின் முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கிறது. தொடர்ந்து அரசு வேலை கிடைக்க, 1989 வரைக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார் பொன்முடி.

முதல்முறையே அமைச்சர்

1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போது விழுப்புரம் மா.செ.வாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் தொகுதியில போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்காக தன்னுடைய அரசு வேலையையும் ராஜினாமா செய்கிறார் பொன்முடி. அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர், அப்துல் லத்தீப்பைவிட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் பொன்முடி. முதல்முறையே அமைச்சராகும் யோகமும் அடிக்கிறது பொன்முடிக்கு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகிறார் பொன்முடி. ஆனால்,1991 ஜனவரியில தி.மு.க ஆட்சி கலைக்கப்பட இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் அவரால் இருக்க முடிந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வுக்குள் தனக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கிக் கொள்கிறார் பொன்முடி. மீண்டும், 1991 தேர்தலில் அதே விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவுகிறார். அவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் கருணாநிதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

1996 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, அதிமுகவின் பன்னீர்செல்வத்தைவிட 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறுகிறார் பொன்முடி. அப்போதைய தி.மு.க அமைச்சரவையில், அவருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலை, பெருநகர வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. 1997-ல் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஆளுநருடன் கருத்து மோதல்

தொடர்ந்து, 2001 தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, பாமகவின் பசுபதியை வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாகிறார். தொடர்ந்து, 2006 தேர்தலிலும் அதே விழுப்புரம் தொகுதியில் மீண்டும் பசுபதியை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்ற பொன்முடி, அப்போதைய தி.மு.க. அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகிறார். 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகத்திடம் தோல்வியைத் தழுகிறார் பொன்முடி. தொடர்ந்து, 2016-ல் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகிறார். தொடர்ந்து, 2020-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக கட்சியின் தலைவர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டார். 1997 முதல் 2020 வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வானதோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி இதுவரையிலும், ஆறுமுறை எம்.எல்.ஏ.வாகவும் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

பொன்முடி-ஆளுநர் ரவி
பொன்முடி-ஆளுநர் ரவி

இந்தமுறை, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பொது இடங்களில் பொன்முடி பேசிய பல்வேறு விஷயங்கள் சர்ச்சையானது. பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனும் கருத்துப் போரில் ஈடுபட்டு வந்தார் பொன்முடி. பொன்முடியின் மூத்த மகன் கௌதம சிகாமணி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார். அவருடைய இளைய மகன் மருத்துவர் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இரா.செந்தில் கரிகாலன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com