திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை மகா தீபம்PT

திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் 'பருவத ராஜகுலத்தினர்'.. யார் இவர்கள்? முழு விவரம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றும் பருவத ராஜகுலத்தினர்கள் என்றால் யார்? இவர்களின் பிண்ணனி என்ன என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
Published on

- பாலாஜி

உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக மகா தீபமானது 2668அடி உயரமுள்ள மலையில் ஏற்றப்படுவதும், அதை காண உலகில் பல பகுதிகளில் இருந்து சுமார் 50லட்சம் பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருந்துவருகிறது.

திருவண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை கோவில்

இந்த மகாதீபம் ஏற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமல்ல, இதற்கு பின்னால் ஒரு முக்கிய கதையே பின்புலமாக உள்ளது. அதாவது திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இந்த பணியை சுமார் 15 தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக கூறப்படுகிறது.

யார் இந்த பருவத ராஜகுலத்தினர்?

(கதைகளின்படி) பருவத ராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாகவும், இவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். அப்படி பார்வதி அவதரித்த வம்சாவழியை சேர்ந்தவர்களே திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வருகின்றனர்.

திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலை தீபம்

தீபம் ஏற்றக்கூடிய நபர்கள் 48 நாட்கள் விரதமிருந்து அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்பட்டு, அதன் பின்னர், கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் இவர்களிடம் வழங்குகின்றார்கள்.

மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை 2,668 அடி உயர மலை உச்சிக்கு இவர்கள் அணையாமல் கொண்டு செல்கின்றனர்..

அணையாமல் உச்சிக்கு எப்படி கொண்டு செல்கின்றனர்?

தீபமானது கொப்பர வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 200 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகட்டில் செய்யபட்ட கொப்பரையை மலைஉச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் பொருத்தப்பட்டுள்ளன. இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என, வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்க படமும், தீபவிளக்கில் அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் போன்று, படம் வரையப்பட்டிருக்கும்..

திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை மகா தீபம்

மகா தீப கொப்பரையில் 4500கிலோ நெய்யும் 1500 மீட்டர் திரியும் இட்டு, அதன் மீது கற்பூர கட்டிகளை குவித்து அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகையன்று மாலை 6மணிக்கு மகா தீபத்தை பருவத ராஜகுலத்தினரே ஏற்றுகின்றார்கள்.

திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை மகா தீபம்

கடந்த காலங்களில் வெறும் 3 நாட்கள் மட்டுமே எரியும் மகா தீபம் கால போக்கில் பக்தர்கள் வருகை அதிகமானதால் சுமார் 11நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை இவர்கள் மலையில் ஏறி மகா தீபத்தை எரிய விடுகின்றனர்.

தீபம் ஏற்றப்பட்ட பிறகு என்ன செய்வார்கள்?

மகா தீபம் ஏற்றிவிட்டு இவர்கள் மாலை கீழே வந்தவுடன் "அண்ணாமலையாரே உன்னை மிதித்து நாங்கள் மலைக்கு சென்றதற்கு எங்களை மன்னித்து விடு” என்று சொல்லும் விதமாக இவர்கள் பிராயசித்த பூஜையும் செய்வதாக கூறுகின்றனர்..

திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை மகா தீபம்

தமிழ், மொழி, பண்பாடு, இனம் இவையெல்லாம் கடந்து சிவனை தரிசிக்க ஆண்டாண்டு காலமாக எங்கிருந்தோ பல லட்ச கணக்கான மக்கள் வருவதும், பாரம்பரிய முறைப்படி பல பூஜைகள் செய்தும் தலைமுறை தலைமுறைகளாக கடவுளுக்கே பல சம்பிரதாய முறைப்படி பல நிகழ்வுகள் நடப்பது வியக்கதக்க விஷயமாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com