“நான் ரெடி..? நீங்க ரெடியா?” - தமிழில் அசத்திய மேற்கு வங்க எம்.பி ஓ ப்ரைன்

“நான் ரெடி..? நீங்க ரெடியா?” - தமிழில் அசத்திய மேற்கு வங்க எம்.பி ஓ ப்ரைன்
“நான் ரெடி..? நீங்க ரெடியா?” - தமிழில் அசத்திய மேற்கு வங்க எம்.பி ஓ ப்ரைன்

தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்க, தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். 

இந்தப் புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்கரி, தேசிய செயலாளர் முரளிதர ராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில எம்.பி. டெரீக் ஓ ப்ரைன் பங்கேற்று பேசினார். ஓ ப்ரையன் தனது உரையை தமிழில் பேசி அசத்தினார். ஓ ப்ரைன் பேசுகையில், “இன்று நான் ஆங்கிலத்திலோ அல்லது பெங்கால் மொழியிலோ பேசலாம். ஆனால், நான் தமிழில் பேச விரும்புகிறேன். நான் பேசுவதில் தவறு இருந்தால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், கூட்டாட்சி தத்துவத்தின் மன்னனாக திகழ்ந்த ஒரு மாபெரும் தலைவரின் புகழஞ்சலி கூட்டத்தில் பேச நான் வந்துள்ளேன். பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்களை கலைஞர் தலைமையிலான திமுக உருவாக்கியுள்ளது. 

கூட்டாட்சி தத்துவத்தின் மன்னனாக திகழ்ந்தவர் கலைஞர். மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடியவர். அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என முழங்கியவர் கலைஞர். அவரின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை போற்ற வேண்டும். மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் பலவற்றை மாநில அரசின் பட்டியலில் இருக்க வேண்டும் என்று கூறியவர் கலைஞர். கலைஞர் ஒரு பகுத்தறிவுவாதி. நவீன சிந்தனைவாதி. கலைஞரின் கொள்கைகள் மற்றும் சிந்தைகளை எப்படி நாம் போற்றுவது? கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் கட்சிகள் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைய வேண்டும். பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டி டெல்லியைக் கைப்பற்ற வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில கட்சிகள் இணைந்து முடிவு செய்ய வேண்டும்” என்றார். 

இறுதியாக தன் பேச்சில் நாங்க ரெடி.. நீங்க ரெடியா? என மூன்று முறை கூட்டத்தினை பார்த்து கேட்டார். அதற்கு பலத்த கரவொலி எழுப்பப்பட்டது. ‘வாழ்க வாழ்க.. கலைஞர் புகழ் வாழ்க’ என்ற முழக்கத்துடன் ஓ ப்ரைன் தனது பேச்சை முடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com