சென்னை பேசின் பாலம் அருகே தடம்புரண்ட மின்சார ரயில்! கீழே இறங்கிய சக்கரங்கள்; விபத்து நடந்தது எப்படி?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் நிலையத்தின் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பேசின் பாலம் ரயில் விபத்து
பேசின் பாலம் ரயில் விபத்துPT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை சரியாக 9:30 மணிக்கு திருவள்ளூரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்து சரியாக 9.45 மணியளவில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார ரயிலின் இரண்டு சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

சுமார் பத்து மீட்டர் தொலைவிற்கு தேய்த்து கொண்டே சென்ற நிலையில் ரயில் பத்திரமாக நிறுத்தப்பட்டது.

விபத்து எப்படி ஏற்பட்டது?

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து அடுத்த ரயில் நிலையமாக இருக்கக்கூடிய வியாசர்பாடி ஜீவாவை நோக்கி ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 100 மீட்டர் இடைவெளியில் ரயில் தடம் புரண்டுள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ந்து போய் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ரயில் தண்டவாளம் வழியாகவே பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை சென்றடைந்தனர்.

பேசின் பாலம் ரயில் விபத்து
பேசின் பாலம் ரயில் விபத்துPT

மொத்தம் 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக எட்டாவது பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியது. அப்போது சாதுரியமாக ரயிலை விரைவாக நிறுத்திய ஓட்டுனர் கோவிந்தராஜால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

மீட்பு பணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மற்ற ரயில்கள்!

சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயிலின் சக்கரத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினர். அந்த வேளையில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9.45 மணிக்கு புறப்பட்ட மற்றொரு திருவள்ளூர் பயணிகள் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பேசின் பாலம் ரயில் விபத்து
பேசின் பாலம் ரயில் விபத்துPT

அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து 9.50 மணிக்கு திருப்பதி செல்லக்கூடிய திருப்பதி மெமோ ரயிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்க வேண்டிய ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாகவும், திருத்தணி திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்கள் ஆங்காங்கே அந்த அந்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 மணி நேரத்தில் முடிவடைந்த சீரமைப்பு பணிகள்!

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள் முதற்கட்டமாக ஒன்பது மற்றும் எட்டாவது பெட்டிகள் கொண்ட ரயிலின் பெட்டிகளை தனியாக பிரித்து, மற்ற தடம் புரளாத ரயில் பெட்டிகளை தனியாக முன் நிறுத்தி வைத்தனர்.

தொடர்ந்து தடம் புரண்ட 8-வது பெட்டியின் சக்கரத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிய ரயில்வே பணியாளர்கள், அதை தனியாக பிரித்து பயணிகள் யாரையும் ஏற்றாமல் அண்ணனூர் ரயில் பணிமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. சுமார் இரண்டரை மணி நேர தீவிர பணிகளுக்குப் பிறகு அந்த வழியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஓரளவிற்கு நிம்மதி அடைந்தனர்.

இது ஒரு சிறிய விபத்து..இதற்கான காரணத்தை தற்போது கூற முடியாது! - சென்னை கோட்ட ரயில்வே மேலாளர்

ரயில் தடம் புரண்ட இடத்திற்கு விரைந்து வந்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இது ஒரு சிறிய விபத்து, 2 சக்கரங்கள் மட்டும் தடம் புரண்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு தற்போது சரி செய்துள்ளனர். இந்த பெட்டியில் 10 முதல் 12 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறினார்.

பேசின் பாலம் ரயில் விபத்து
பேசின் பாலம் ரயில் விபத்துPT

மேலும், “இந்த விபத்து தொடர்பான காரணத்தை தற்போது தெரிவிக்க முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த விபத்து தொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சில தினங்களுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட ரயில் விபத்துக்கும், தற்போது நடந்திருக்கும் இந்த ரயில் விபத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com