அரபிக் கடலிலுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் சில தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் திருவனந்தபுரம் அருகே உள்ள கற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் நாட்களில் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 20 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது மதுரை, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

