ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு?: பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி
புதுக்கோடை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
விராலிமலையில் உள்ள அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த, கடந்த 13-ஆம் தேதி விழாக்குழுவினர் அனுமதி கோரி இருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, 17-ஆம் தேதியான இன்று ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தள்ளி வைத்து, மற்றொரு நாளில் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், விராலிமலை சோதனைச் சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்தது. 2 மணி நேரம் இந்தப் போராட்டம் நீடித்தது.
பின்னர், போராட்டக்காரர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.