டெங்கு பாதிப்பு: சேலம், செங்கல்பட்டில் மத்தியக் குழு இன்று ஆய்வு

டெங்கு பாதிப்பு: சேலம், செங்கல்பட்டில் மத்தியக் குழு இன்று ஆய்வு
டெங்கு பாதிப்பு: சேலம், செங்கல்பட்டில் மத்தியக் குழு இன்று ஆய்வு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு, இன்று சேலம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்குச் செல்கிறது. அதேசமயம் டெங்குவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, அதற்காக 256 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள, எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய குழு, சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது. அப்போது டெங்கு பாதிப்பு நிலவரம், அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மத்திய குழு கேட்டறிந்தது.

அதைத்தொடர்ந்து சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு செய்தது. குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று டெங்கு காய்ச்சல் குறித்தும், அரசின் நடவடிக்கை பற்றியும் பொதுமக்களிடம் மத்திய குழு கேட்டறிந்தது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வு குறித்து பேசிய குழுவின் தலைவர் அசுதோஷ் பிஸ்வாஸ், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார். அதேசமயம் டெங்குவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, அதற்காக 256 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதனிடையே, டெங்கு உயிரிழப்பு குறித்த மத்திய, மாநில அரசுகளின் தகவல்களில் முரண்பாடு இருக்கிற நிலையில், இதுகுறித்த உண்மை நிலையை மத்திய குழு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், இன்றைய தினம் இரண்டு குழுக்களாக பிரிந்து சேலம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்குச் ஆய்வுக்காக செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com