களைகட்டியது சிவகாசி: பட்டாசுக்காக மக்கள் படையெடுப்பு
குட்டி ஜப்பான் என்று வர்ணிக்கப்படும் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேரில் சென்று பட்டாசு வாங்குவதற்காக தமிழகம் முழுவதுமிருந்தும் வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
தீபாவளி என்றாலே சட்டென்று நினைவிற்கு வருவது பட்டாசும், சிவகாசியும்தான். மலிவு விலையிலும், பல வகைகளிலும் இங்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கே படையெடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு சுமார் 4,000 கோடியை தாண்டிய பட்டாசு வர்த்தகம், இந்த ஆண்டு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக 2,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே நடைபெற்றுள்ளதாக பட்டாசு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி வரி உயர்வால் வெளிமாநில மொத்த ஆர்டர்கள் பாதித்தாலும் தமிழகத்தில் சில்லறை விற்பனை அமோகமாகவே நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
பல்வேறு வகையான பட்டாசுகளை நேரில் பார்த்து வாங்குவதில் மிகுந்த திருப்தி ஏற்படுவதாகவும், சிவகாசியில் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு கிடைப்பதால் பணம் மிச்சமாவதாகவும் வெளியூர் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுடன் நேரில் சென்று பட்டாசு வாங்குவது மறக்க முடியாத அனுபவமாக அமைவதாகவும், நேரில் வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.