டெல்லியே செல்லவில்லை ; ஆனாலும் விடாத அதிகாரிகள் - சிக்கித் தவித்த மளிகைக் கடைக்காரர்
முசிறி அருகே மளிகைக் கடை நடத்தி வரும் இளைஞரை டெல்லி சென்றுவந்ததாக கருதி திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதித்து சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாளவந்தி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை தனது வீட்டின் ஒருபகுதியிலேயே சிறிய மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு வந்த வருவாய், சுகாதாரம் மற்றும் காவல்துறையினர், டெல்லி சென்றுவிட்டு வந்து கொரோனா சோதனைக்கு வராமல் இருப்பதாக கூறி விசாரித்துள்ளனர். தாம் டெல்லி செல்லவில்லை என்றும் ஊரைவிட்டு எங்கும் தாம் வெளியே போகவில்லை என்றும் செல்லதுரை கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
சந்தேகத்திற்குரிய விமான டிக்கெட்டை பரிசோதித்தபோது பயணம் செய்தவர் பெயர் சுபீர் அலி என்று இருந்தது. அதில் இருந்த முகவரியும் ஆதார் எண்ணும் செல்லதுரைக்குரியதாக இருந்ததால் அவரை வலுக்கட்டாயமாக திருச்சி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு செல்லதுரையின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் செல்லதுரைக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து செல்லதுரையின் முகவரி, ஆதார் எண்ணை கொண்டு தமிழகம் வந்தது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.