21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..!

21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..!
21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம்..!

அண்ணா நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றது. அவரது உடலை சுற்றி திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் முழக்கங்களை எழுப்பி இறுதிவரை வந்தனர். 

இதனிடையே, அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில், கருணாநிதியை அடக்கம் செய்யும் நினைவிடம் தயாரானது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் இந்தப் பணிகளை ஆய்வு செய்தனர். ராணுவ வாகனத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மாலை 6.15 மணியளவில் அண்ணா நினைவிடம் வந்தது.

மெரினா வந்தடைந்த கருணாநிதியின் உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் ராணுவ மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்கள் கருணாநிதியின் உடலை சுமந்து சென்று தரையில் வைத்தனர். 

பின்னர், அண்ணா நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு ராகுல்காந்தி, வீரப்ப மொய்லி, நாராயணசாமி, சந்திரபாபு நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேவகவுடா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், ஸ்டாலின், அழகிரி, மு.க.தமிழரசு, ராசாத்தி அம்மாள், செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி, சொர்ணம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கருணாநிதியின் உடல் கண்ணாடி பேழையில் இருந்து “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வசனம் பொறிக்கப்பட்ட சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. அப்போது, கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறினர். உடன் 21 குண்டுகள் வானில் முழங்க கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் இரவு 7 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com