திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சீமான் மீது தாக்கல் செய்த அவதூறு வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு
செய்தியாளர்: வி.சார்லஸ்
திருச்சி சரக டிஐஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார்.
இந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் உயர் பதவியில் இருக்கும் டிஐஜி வருண் குமார் அவருடைய கடமையை செய்த பொழுது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்தும் அவதூறான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்த வழக்கு அல்ல இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதங்களை முன் வைத்தனர்.
இரண்டு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா அல்லது தள்ளுபடி செய்யலாமா என ஜூன் நான்காம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மதியத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் மதியம் வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில் இந்த வழக்கு குற்றவாளக்காக விசாரிக்க உகந்த வழக்கு எனவும் இது தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் டிஐஜி வருண்குமார் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது... சீமான் மீது வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என நீதிபதி தீர்ப்பளித்தது முதல் வெற்றி அல்ல. ஐபிஎஸ் அதிகாரியின் நற்பெயருக்கு களங்கப்படுத்தி அவதூறாக செய்திகளை பரப்பியதால் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டுள்ளது. வருண்குமார் தொடர் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். மேலும் சீமான் மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.