சாலைகளில் திரியும் மான்கள் : வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றித்திரியும் மான்களைப் பிடித்து மலைப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ் அம்பி பகுதியில் இரவு நேரங்களில் மான்கள் உள்ளூர் சாலையிலும், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வப்போது கடந்து வருவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். அப்பகுதிகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவ்வப்போது மான்கள் துள்ளித் துள்ளி ஓடுவதை கண்டு, அப்பகுதி மக்களிடம் பலமுறை கூறியுள்ளனர்.
இவ்வாறு மான்கள் சுற்றித்திரிவதால், சாலைகளில் செல்வோர் மான்களை இடிக்காமல் செல்ல முயலும் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வெளியூர் வாகனங்கள் அந்தச் சாலைகளை கடக்கும்போது, மான்கள் திரியும் தகவல் தெரியாமல் வேகமாக செல்வதால், அந்த வாகனங்களில் அடிபட்டு மான்கள் இறக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்களும் விவசாயிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும், மான்களை பிடித்து மலைப்பகுதிகளில் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.