’வெறும் 14 பேர்.. 12 பேர்’ பிரதான கட்சிகளில் குறைந்துபோன பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை!

’வெறும் 14 பேர்.. 12 பேர்’ பிரதான கட்சிகளில் குறைந்துபோன பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை!
’வெறும் 14 பேர்.. 12 பேர்’ பிரதான கட்சிகளில் குறைந்துபோன பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை!

இந்த நாடு இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஷீலா தீக்ஷித், ஆனந்தி பென் பட்டேல், மெஹ்பூபா முஃப்தி, மாயாவதி, ராப்ரி தேவி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல பெண் தலைவர்களை கண்டதுண்டு. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டையும் பிரதான கட்சியான அதிமுகவையும் நேர்த்தியாக கையாண்ட பெண் தலைவர் ஜெயலலிதா காலத்தில் வாழ்ந்தோம் அல்லவா. இத்தனை பெண் பிம்பங்கள் இருந்தும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில் தமிழக பிரதான கட்சிகள் தயக்கம் காட்டுவது இந்த தேர்தலிலும் தொடர்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளிக்க, அடுத்த நாளே ஆயிரத்து 500 ரூபாயும், வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார். பெண்கள் மீதான இந்த அக்கறையையும், ஆதரவையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருகட்சிகளும் காட்டவில்லை என்பது, வேட்பாளர் பட்டியல் மூலம் தெளிவாகிறது.

திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 12 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதிமுகவிலோ 14 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, இரு கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டது தெரிகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் 19 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தற்போது, அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு 12 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் 31 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். இந்த முறை அந்த எண்ணிக்கையை குறைத்து 14 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆண்களுக்கு நிகராக 50 சதவீத பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தொகுதிகளில் தேர்தல் செலவினம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வேட்பாளர்களை தேர்வு செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதைப் போல், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தலில் ஆண் வேட்பாளர்களுக்கு பெண் வேட்பாளர்கள் கடும் போட்டியாகவே விளங்குவர். யாருக்கு என்ன தேவை? என்பதை அறிந்து அனுசரித்து சிறப்பாக குடும்பத்தை வழிநடுத்தும் பெண்களின் அனுபவம், அரசியலிலும் அவர்கள் ஜொலிக்க நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com