தமிழால் இணைந்த பாசம்! 2002ல் வழிதவறி மும்பை சென்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 2023ல் நிகழ்ந்த மேஜிக்!

தருமபுரியில் 21 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன வாய் பேச முடியாத பெண் குழந்தையை, கையிலிருந்த தமிழ் எழுத்துக்களை(டாட்டூ) வைத்து மும்பையில் உறவினர்கள் மீட்டுள்ளனர்.
காணாமல் போன ரம்யா
காணாமல் போன ரம்யாpt web

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெண்டேனள்ளி புதூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மாதம்மாள் மகள் ரம்யா. பிறந்தது முதல் காதுகேளாமல் வாய் பேச முடியாதவராக ரம்யா இருந்த காரணத்தால் அவரை, தருமபுரி அருகே உள்ள தனியார் வாய் பேச முடியாத காதுகேளாத பள்ளியில் கல்வி கற்க சேர்த்து விட்டனர். அங்கு கடந்த 2002 ஆம் ஆண்டு 10 வயதாக இருக்கும்போது பள்ளி சார்பில், பள்ளி குழந்தைகளுடன் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சுற்றுலாவில் ரயிலில் வரும்போது, வழி மாறி காணமல் போயுள்ளார்.

இதனையடுத்து ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் மகளைதேடும் முயற்சியை கைவிட்டனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த வாய் பேச முடியாத ஒரு பெண் மும்பையில் உள்ளார் என அவரது புகைப்படத்தை சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பிற்கு அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். மேலும் கூடுதலாக அந்தப் பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயரையும் புகைப்படமாக எடுத்து அனுப்பி இருந்தனர்.

தமிழகம் முழுவதும் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத அமைப்பினர் தங்களுக்குள் மாவட்ட வாரியாக தொடர்பு வைத்துள்ளதால், இந்த இளம் பெண்ணின் கையில் பச்சை குத்தியிருந்த புகைப்படம் மற்றும் அந்த பெண் புகைப்படத்தை மாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என நினைத்து அவர்களது பெற்றோரை இந்த அமைப்பினர் தொடர்பு கொண்ட பொழுது, அந்த புகைப்படம், கையில் பச்சை குத்தி இருந்த பெயர்களை வைத்து உறுதி செய்தனர்.

இந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்த இளம்பெண்ணை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னையில் இருந்து தருமபுரி ரயில் நிலையம் வளாகத்தில் பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது இளம்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் மாற்று திறனாளி அமைப்பினர் பெண்ணுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும், பெண்ணை அடையாளங்கண்டு அழைத்து அமைப்பினருக்கு, வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா சென்றபோது, ரயில் தவறிய மாற்று திறனாளி பெண்ணை, கையில் இருந்த பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களால் கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com