1.5 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்! என்ன காரணம்?

1.5 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்! என்ன காரணம்?
1.5 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட இறந்தவரின் சடலம்! என்ன காரணம்?

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மரணித்து அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் சடலம், ஒன்றை வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒன்றரை வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், இறந்த நபரின் உடல் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் பாஸ்கரன் (27 வயது), துணி தைக்கும் டைலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று, தனது நண்பர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டு வந்த பாஸ்கரன், வழக்கம்போல இரவு வீட்டில் தூங்க சென்றுள்ளார்.

ஆனால் நள்ளிரவு வேலையில் திடீரென அவருக்கு உடல்வலி ஏற்பட்டு அவதியடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது மனைவி ஆட்டோவில் அவரை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இருப்பினும் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாஸ்கரன் உறவினர்கள் பாஸ்கரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலிவுறுத்தியுள்ளனர். ஆனால் பாஸ்கரன் மனைவி பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். இதனையடுத்து பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் புரத்தாக்குடியில் உள்ள அருந்ததியர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புறத்தாக்குடி கிராம அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து பாஸ்கரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

பாஸ்கரன் உறவினர்கள் அளித்த புகாரில், “ பாஸ்கரன் மரணித்த போது அவருடைய கைகள் நீலம் பூத்திருந்தது. அதை குறிப்பிட்டு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய போதும், வயிற்றுவலியால் தான் பாஸ்கரன் இறந்துவிட்டதாக போலீசார் மெத்தனமாக வழக்கை முடித்துவிட்டனர். முன்விரோதம் காரணமாக கூட பாஸ்கரனின் மரணம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரனை நடக்க வேண்டும். அதற்காக பாஸ்கரன் சடலத்தை உடற்கூறாய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும்” என்று புகார் அளிக்கப்பட்டது.

புகாரை விசாரித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பாஸ்கரன் மரணம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. ஒன்றரை வருடமாக உடல்கூறாய்வு நடத்துவதற்கு போராடி வந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாச்சியர் சக்திவேல் முருகன் முன்னிலையில், திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பாஸ்கரன் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக எழும்புகளை சேகரித்தனர். சம்பவத்தின்போது சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com