மணல் கொள்ளையால் வெளியே தெரியும் சடலங்கள்: தொற்று நோய் பரவும் ஆபத்து
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலங்கள், மணல் கொள்ளையால் வெளியே தெரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திட்டக்குடியை அடுத்த கொடிகுளம் ஊராட்சி மக்களுக்கு, வெள்ளாற்றின் கரையோரம் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டின் வழியாக சிலர் ஆற்று மணலை கடத்தி வருகின்றனர், இதனை பயன்படுத்தி செங்கல் சூளைக்காக கரையில் உள்ள மணலையும் சிலர் சுரண்டி எடுத்து சென்றுள்ளனர். தற்போது மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சுடுகாட்டில், சமீபத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் மற்றும் எலும்பு கூடுகள் வெளியில் தெரிகின்றன.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் புதைக்கப்பட்ட தங்கள் மூதாதையர்களின் சடலங்களை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.