தம்பி மகளிடம் பாலியல் தொல்லை ! அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் கிராமத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முன்விரோதம் காரணமாக அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தம்பி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் கிராமத்தில் முதலியார் தெருவில் வசித்து வந்தவர் திருமால் வேதநாராயணன்(41). அவருடைய தம்பி ரவீந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மெய்யூர் கிராமத்தில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றதாக தெரிகிறது. திருமால்வேதநாராயணன் தனது தாயார் மற்றும் மகளுடன் மெய்யூர் கிராமத்திலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிறுநீர் கழிப்பதற்காக திருமால்வேதநாராயணின் தாயார் மற்றும் மகளும் வீட்டின் பின்னால் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது திருமால்வேதநாராயணின் தம்பி ரவீந்திரன் வீட்டினுள் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால், முதலில் அடையாளம் தெரியாமல் இருந்த வேதநாராயணின் தாயும், மகளும் ஓடியது ரவீந்திரன் தான் என உறுதி செய்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தப்போது திருமால்வேதநாராயணன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது.
இதனையடுத்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், அவரது தாயார் லலிதா(61) அளித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறும்போது கொலை செய்யப்பட்ட திருமால்வேதநாராயணன், தன் தம்பி ரவீந்திரனின் மகளுக்கு 2016ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்து, கல்பாக்கம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். தன் மகளை பாலியல் தொல்லை அளித்த விரோதத்தின் காரணமாக ரவீந்திரன், அண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடைபெற்ற வீட்டினுள் இருந்து அவரது தம்பி தப்பியோடியதை உடனிருந்து நபர்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அதனால், ரவீந்திரனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.