இறந்த மூதாட்டியின் சடலத்துடன் ஆற்றில் இறங்கி ஆபத்தான பயணம்: பாலம் கேட்டு கோரிக்கை

இறந்த மூதாட்டியின் சடலத்துடன் ஆற்றில் இறங்கி ஆபத்தான பயணம்: பாலம் கேட்டு கோரிக்கை

இறந்த மூதாட்டியின் சடலத்துடன் ஆற்றில் இறங்கி ஆபத்தான பயணம்: பாலம் கேட்டு கோரிக்கை
Published on

உயிரிழந்த ஆதிவாசி மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கரைபுரண்டு ஓடும் மாயாற்றில், பாடை கட்டி உடலை சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் தற்போது மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் தென்கரையிலுள்ள நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா ஊராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் கிராமத்தில் ஆதிவாசி பழங்குடி இனத்தை சேர்ந்த திவணன் மற்றும் அவரது மனைவி ராமி (65) இருவரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர்களது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் அருகே உள்ள கரிக்கூர் கிராமம். இறந்த ராமியின் உடலை அடக்கம் செய்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிக்கூர் கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக, ராமியின் உடலை பாடைகட்டி அடர்ந்த வனப்பகுதி வழியாக கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் இறங்கி கொண்டு சென்றனர். ஆற்றைக் கடந்த பின்பு ஆம்புலன்ஸில் ஏற்றி மூதாட்டியின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

தெங்குமரஹாடா ஊராட்சியில் உள்ள தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் அல்லிமாயாறு, சித்திரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வன கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரவேண்டும் என தெங்குமரஹாடா ஊராட்சியை சேர்ந்த வன கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com