‘கட்டட வசதியில்லை..’ கோயில், மைதானங்களில் நடக்கும் வகுப்புகள்! திருப்பத்தூர் அரசுப்பள்ளியின் அவலநிலை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியவரிகம் ஊராட்சி. இந்த பெரியவரிகம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் சுமார் 260 மாணவர்கள் பயின்று வருகின்றனர், 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் 2 அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வந்துள்ளன. அதில் 60 குழந்தைகள் பயின்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிக் கட்டடம் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அதை இடித்து அகற்றியுள்ளனர். ஆனால், அகற்றப்பட்டு ஓர் ஆண்டு ஆன பின்னும் புது கட்டடம் கட்டப்படவில்லை.
புதிய கட்டடம் வேண்டி ஊராட்சி மன்றத் தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது அப்பள்ளி இடிக்கப்பட்டதால் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு அருகில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், மேலும் அதிக மழை மற்றும் வெயில் காலத்தின்போது கோயில் வளாகத்தில் பாடம் நடத்தப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், அங்கன்வாடி கட்டடங்களும் இடிக்கப்பட்டு தற்போது ஓராண்டு ஆகியுள்ளதால், அவர்களுக்கும் கட்டடங்கள் இல்லாமல் 2 அங்கன்வாடி மையத்தில் உள்ள 60 குழந்தைகளையும் புதுவாழ்வு திட்டம் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் தற்காலிகமாக உட்காரவைத்து தற்போது வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதில் போதிய வசதி மற்றும் கழிவறை இல்லாமல் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி கட்டடங்களை கட்ட ஆணையிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாதனூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் சுரேஷ் கூறுகையில், “பள்ளி கட்டடங்களை, 2 தளங்களாக் கட்டுவதற்கு அரசு சார்பில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளது. விரைவில் கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கும். வசதி இல்லாத காரணத்தால் தற்போது கோயிலில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டு, அங்கேயே பாடங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது” என்று தெரிவித்தார்