கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறை 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நான்கு இடங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கீழடியில் 20 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும், மணலூரில் ஏழு குழிகளும், கொந்தகையில் ஒன்பது குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முழுவதும் தண்ணீரை வெளியேற்றி குழிகளை காயவைக்கும் பணி நடைபெறும். இன்று இரவு மழை பெய்தால் நாளையும் பணிகள் நடைபெறுவது சிரமம். செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.