அணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்

அணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்

அணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்
Published on

முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

1836- ம் ஆண்டு கட்டப்பட்ட முக்கொம்பு மேலணை, மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்ப பயன்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றிரவு முக்கொம்பு அணையின் 45 மதகுகளில் 8 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 9 ஆவதாக மேலும் மதகு வெள்ளத்தில் உடைந்தது. 

இதனையடுத்து அந்த இடத்தில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 ஆண்டுகள் பழமையான அணைகள் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார். முக்கொம்பு மேலணையில் உடைப்பு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிப்பை சீர் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்படும் பகுதி பாதுகாப்பாக உள்ளதாகவும் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

முக்கொம்பு மேலணையின் வரலாறு;

மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்பும் பகுதி முக்கொம்பு. காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலப்பதைத் தவிர்க்க ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் அணை கட்ட பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முடிவு செய்தார். கரிகால சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி 1836 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணி தொடங்கியது. முக்கொம்பில் 45 மதகுகளுடன் அணையை கட்டி முடித்தார் ஆர்தர். 6 புள்ளி 3 மீட்டர் அகலம் கொண்ட இதன் மேல்பகுதி வழியாக வாத்தலை - முக்கொம்பு இடையே கார், இருசக்கர வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு வந்தது. 

கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்கு மேலாக டெல்டா மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தண்ணீரை முறைப்படுத்தி வழங்கி வருகிறது முக்கொம்பு அணை. அதன் மதகுகள் உடைந்ததால் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக்கூட இனி முக்கொம்பு அணையில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com