சிலிண்டர் வெடித்து தீ விபத்து? - சென்னை முகப்பேர் வீட்டில் 3 பேர் படுகாயம்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து? - சென்னை முகப்பேர் வீட்டில் 3 பேர் படுகாயம்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து? - சென்னை முகப்பேர் வீட்டில் 3 பேர் படுகாயம்

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை முகப்பேர் மேற்கு கார்டன் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அகமது ஷெரீப் (60) சாட்டர்டு அக்கவுண்ட்டாக உள்ளார். இவரது மனைவி நாகமுனி ஷா, அகமது ஷெரீப்பின் தங்கை மலிதா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று காலை இவரது வீட்டில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. உடனே அருகில் கடை வைத்திருப்பவர்கள், வசிப்பவர்கள் ஓடி சென்று பார்த்த போது கதவுகள் பெயர்ந்து இருந்தது. காம்பவுண்ட் சுவர் சரிந்து இருந்தது. வீட்டிற்குள் அகமது ஷெரீப், நாகமுனி ஷா, மலிதா ஆகியோருக்கு உடலில் தீக்காயத்துடன் கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து ஜெஜெநகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோயம்பேடு, தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த பூக்கடை வைத்திருக்கும் இந்துமதி மற்றும் செல்வகுமார் என்பவர்கள் கூறுகையில், "இன்று காலை 7 மணியளவில் நாங்கள் கடையை திறக்க வந்த போது வெடி வெடித்ததுபோல பயங்கர சத்தம் கேட்டது. ஓடி சென்று பார்த்த போது தீக்காயத்துடன் 3 பேரும் கிடந்தனர், என்ன வெடித்தது என்று தெரியவில்லை. அங்கு வெடித்த சத்த அதிர்வால் அருகில் இருந்த கடைகளின் கண்ணாடிகள், வீட்டின் ஜன்னல் கதவுகளை அனைத்தும் உடைந்தது. மேலும் வீட்டில் ஏற்பட்ட தீயில் கட்டில், பீரோ போன்ற பொருட்களும் எரிந்தது, நாங்கள் அவற்றை தூக்கி வந்து வீசினோம். இதில் வீட்டில் இருந்த பூனை இறந்து விட்டது" என்று அவர்கள் கூறினர்.

தீ விபத்து குறித்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். வீட்டில் இருந்த இன்டேன் கியாஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக நொளம்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தீ விபத்திற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இது குறித்து தடயவியல் சோதனைக்கு பிறகு தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். வீட்டிலிருந்த கேஸ் வெடித்த சத்தத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த கடைகள், கண்ணாடிகள், வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com