அதிதீவிர புயலாக மாறிய ‘மஹா புயல்’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது.
மஹா புயல் நேற்று மாலை நிலவரப்படி, குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து மேற்கு தென்மேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மஹா புயல், நாளை திசைமாறி, குஜராத் மாநிலம் நோக்கி திரும்புகிறது. தீவிர புயலாக வலுகுறையும் புயல், டையு மற்றும் துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மஹா புயல் திசை மாறுவதால் கொங்கன் மற்றும் வட மத்திய மகாராஷ்டிராவில் கன மழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.