ஃபெஞ்சல் கரையை கடக்கும் இடத்தில் தீடீர் மாற்றம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணிப்பு!
ஃபெஞ்சல் புயல் மாமல்லப்புரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், புயல் கரையை கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது என்று சுயதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தகவலை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ ஃபெஞ்சல் புயல் கடந்த சில நாட்களாகவே, இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. தற்போது நேற்று முதல்தான் நகர்ந்து வருகிறது. இதில், அரேபிய உயரழுத்தத்தின் தாக்கமும், பசிபிக் உயரழுத்தத்தின் தாக்கம் என இரண்டு தாக்கங்கள் இருக்கிறது.
அரேபிய உயரழுத்தத்தின் தாக்கம் நிலவுவதால், புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டு,முன்னதாக புதுச்சேரியில் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.. ஆனால், சென்னைக்கும் - புதுவைக்கும் இடையே மரக்காணம் - மகாபலிபுரத்தில் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மழைப்பொழிவை பொறுத்தவரை குறுகிய காலத்தில் தீவிர மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்ப்பார்த்ததை விட அதிக மழைப்பொழிவு இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.