கரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்...
பெய்ட்டி புயலால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி வங்கக்கடலில் உருவான பெய்ட்டி புயல், நண்பகலில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் கரையைக் கடந்தது. இது கடந்த 3 மாதத்தில் ஆந்திராவைத் தாக்கிய 3வது புயல். பெய்ட்டி புயலால் கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டிணம், விஜயவாடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. விஜயவாடாவில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-ஹவுரா ரயில் உள்பட சுமார் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
புயல் ஏற்படுத்திய சேதத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. புயலால் பெரும்பாலான பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. பெய்ட்டி புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.