அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாக உள்ள ‘நிவர்’ புயலானது மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக காரைக்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 25ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.