வேகத்தை அதிகரித்த டிட்வா புயல்.. கனமழை எச்சரிக்கை.. நாளை எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை?
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வேகத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலின் வேகம், தற்போது அதிகரித்து 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (நவ.30) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக, தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுவையிலும், நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாளை மறுநாள், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதியில் சூறைக்காற்று
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக, தனுஷ்கோடி பகுதியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி, கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி தனுஷ்கோடிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புயல் காரணமாக, நாளை (நவ.29) தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
எந்தெந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
ஆனால், இது தவறான தகவல் என விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசு, மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக, சென்னையிலிருந்து நாளை செல்லவிருந்த 22 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

