
புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மாவட்ட ஆட்சியர் அருணா பார்வையிட்டு குறைகளை கேட்டு அறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதி கிராமங்களான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், அம்மாபட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டைப்பட்டினம் ராம்நகர் மீனவர் காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டு அறிந்ததோடு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கு முன்பாக அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நம் மக்களிடம் ஆட்சியர் அருணா தெரிவித்தார்.