புரெவி புயல் Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

புரெவி புயல் Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
புரெவி புயல் Updates: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

புரெவி புயல் தொடர்பான டிச.3 வரையிலான அப்டேட்ஸ் இங்கே...

டிச.03, இரவு 08.20மணி: பாம்பனுக்கு தென்மேற்கே 20 கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த புயல் இன்று மாலை 5.30க்கு வலுவிழந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புயல், ராமநாதபுரம் - தூத்துக்குடிக்கு அருகே கரையை கடக்கும்; அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தில் 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காற்றின் திசை காரணமாக மத்திய பகுதிக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்துள்ளதால் மழை பொழியும் எனத் தெரிவித்துள்ளது. 

டிச.03, இரவு 07.51மணி: புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார். இன்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக கரையைக் கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மாற்றமாக புய வலுவிழந்துவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாகி இருந்தாலும் மழைப்பொழிவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை பொதுமக்கள் அப்படியே கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

டிச.03, இரவு 07.37மணி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தூத்துக்குடியிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லக்கூடிய விமானங்கள் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 

டிச.03, இரவு 07.03மணி: புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மணிநேரத்தில் புரெவி புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புயலால் ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய பணிகள் தவிர பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு ஈடாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது. 

டிச.03, மாலை 06.21மணி:  புயலை எதிர்கொள்ள 490 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அந்த மையங்களில் 2 லட்சம் பேரை தங்கவைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், புயல் சமயத்தில் மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நெல்லையில் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு வெளியிடும் தகவல்கள் மட்டுமே உறுதியானவை; சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

டிச.03, மாலை 06.10 மணி: தூத்துக்குடி மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். புயலால் கனமழை பெய்யும் என்பதாக் கடற்கரை, நீர்நிலைகளுக்கு அருகே மக்கள் செல்லவேண்டாம் எனவும், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லவேண்டும்; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லவேண்டும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் 1077, 0461 - 2340101, 94864 54714 என்ற எண்களில் புயல் பாதுகாப்பு குறித்த தகவலை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  

டிச.03, மாலை 06.05 மணி: தொடர்மழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 

டிச.03, மாலை 05.57 மணி: புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 2 ரயில்கள் மதுரையுடன் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து நாளை தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல் நாளை தூத்துக்குடிக்கு பதில் மதுரையில் இருந்து முத்துநகர் விரைவு ரயில் சென்னைக்கு புறப்படும்; மைசூர் விரைவு ரயிலும் நாளை மதுரையுடன் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

டிச.03, மாலை 05.41 மணி: புரெவி புயல் இன்னும் 3 மணிநேரத்தில் பாம்பனை கடக்க உள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.03, மாலை 05.33 மணி: புரெவி புயல் இன்னும் 3 மணிநேரத்தில் பாம்பனை கடக்க உள்ளதால் தூத்துக்குடியில் மாலை 6 மணி முதல் மக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கடற்கரை, நீர் நிலைக்களுக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

டிச.03, மாலை 04.25 மணி: திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடந்த புரெவி புயல் பாம்பனுக்கு மிக அருகே நிலை கொண்டுள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே புயல் செல்லும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

டிச.03, மாலை 04.20 மணி: புரெவி புயல் எதிரொலியாக 6 அடி முதல் 7 அடி வரை கடல் அலை மேலே எழும்பியுள்ளது. கரை பகுதியில் பத்து மீட்டருக்கும் அப்பால் தண்ணீர் வந்து செல்வதால் நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

டிச.03, மாலை 04.00 மணி: புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்க இருக்கும் நிலையில் நிவர் புயலில் மக்கள் ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பாக கடந்து சென்றது போல் இந்த புயலிலும் மக்கள் அரசு கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

> புரெவி புயலால் தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

டிச.03, பிற்பகல் 03.57 மணி: நாகையில் 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பில் இரு வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: பல்வேறு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

> புரெவி புயல்: டெல்டா மாவட்டங்களில் கனமழை

டிச.03, பிற்பகல் 02.12 மணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கறம்பக்குடியில் ராணி என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.இதேபோல் திருமயம் அருகே ஆயிங்குடி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடும் மழையால் இடிந்து விழுந்தது. மேலும் இலுப்பூரில் அந்தோனியார் கோவில் தெருவில் ஜான் சந்தியாகு என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த மூன்று சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

டிச.03, பிற்பகல் 02.09 மணி: புரெவி புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியான மணமேல்குடி கோடியக்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எப்போதுமே அலைகள் இல்லாத இந்த கடல் இன்று அலைகளோடு காணப்படுகிறது.

டிச.03, காலை 12.10மணி: புரெவி புயல் காரணமாக, ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விவரம்:  புரெவி புயல்: ராமேஸ்வரத்தில் கனமழை; நங்கூரத்தை அறுத்து கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

டிச.03, காலை 12.05மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு 3000 கன அடி நீர் வருவதால் முதல்கட்டமாக 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

டிச.03, காலை 11.56 மணி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு, பழனி மற்று அடுக்கம் சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலில் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், உள்ளூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

டிச.03, காலை 11.36 மணி: காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 545 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. 

டிச.03, காலை 11.17 மணி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

டிச.03, காலை 10.49 மணி: புரெவி புயலையொட்டி தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியிடம் போனில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்த அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

டிச.03, காலை 10.35 மணி:  புரெவி புயல் காரணமாக, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. > விரிவாக வாசிக்க > புரெவி புயல்: வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கனமழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்

டிச.03, காலை 10.25 மணி: திருவள்ளூர் ஆரணியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

டிச.03, காலை 10.00 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு நீர் வரத்து 3000 கன அடியாக உயர்ந்ததால் இன்று முதல் கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 23.5 அடியில் 22.15 அடி நீர் உள்ளதால் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் இருந்து... - புதிய தலைமுறை ஃபேஸ்புக் நேரலை:

முந்தையச் செய்திகள்:

> புரெவி புயலின் எதிரொலியால், தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுதொடர்பான விரிவான செய்திக்கு > பாம்பனுக்கு மிக அருகில் ‘புரெவி‘ புயல்... கொட்டும் மழை; தயார் நிலையில் தென் தமிழகம்!

> புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. - விரிவாக வாசிக்க > புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!

> புரெவி புயல் - பாம்பனில் பலத்த காற்றுடன் கனமழை!

> புரெவி புயல்: தயார் நிலையில் தூத்துக்குடி மாவட்டம்...

> புரெவி புயலால் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. அளவுக்கு கனமழை | நேரடி தகவல்

> புயல் பாதிப்பு - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை!

> பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் - தென்மாவட்டங்களின் தற்போதைய நிலவரம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com