வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல் - எப்போது கரையை கடக்கும்?
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புதிய புயலுக்கு 'அசானி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வந்து பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'அசானி' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த புயலானது அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது. வரும் 10-ம் தேதியன்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான கடற்பகுதியில் 'அசானி' புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.