\
எடப்பாடி பழனிசாமி - சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி - சிவி சண்முகம்pt

”அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை..” EPS-ஐ கடுமையாக விமர்சித்த சிவி சண்முகம்!

திமுகவுடன் இணைந்து முதல்வர் பதவியில் அமர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி என சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on
Summary

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தோல்வியடைந்ததற்கான காரணங்களை சுட்டிக்காட்டிய சிவி சண்முகம், திமுகவுடன் இணைந்து முதல்வர் ஆசை கொண்டதாக குற்றம்சாட்டுகிறார். வடமாவட்டங்களில் அதிமுக வெற்றிக்கு பாமக கூட்டணி முக்கிய காரணம் என்றும், பாமக இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி கூட நெருக்கடியில் இருந்திருப்பார் என அவர் கடுமையாக தாக்குகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கி வருகிறது.

இந்தசூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - சிவி சண்முகம்
”Mr. Chief Minister.." முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அதேபோல் வாக்கு சதவிகிதமும் சரிகிறது. எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுகவுடன் இணைந்து முதல்வர் பதவியில் அமர நினைத்தார் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக வெளியேறுகின்றனர் சீட்டுக்கட்டு போல் கட்சி சரிகிறது. இன்னும் தனது தவறை உணராமல் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

40க்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை, பாமக கூட்டணியில் இல்லை என்றால் வடமாவட்டங்களில் அதிமுகவால் வென்றிருக்க முடியாது. பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியே தட்டுத் தடுமாறிதான் ஜெயித்திருப்பார்” என விமர்சித்துள்ளார்.

மேலும், யாருடைய கருத்தையும் ஆலோசனையையும் கேட்க மாட்டேன் என பழனிசாமி செயல்படுகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டுமே கேட்கிறார் என்று கூறிய சிவி சண்முகம், விரைவில் செயற்குழு கூட்டத்தை கூட்டி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சியை சரிசெய்யுங்கள், இல்லையேல் எங்கள் முடிவை பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - சிவி சண்முகம்
“மோடி அரசுக்குப் பாதை அமைத்துத் தராதீர்கள்..” ராகுல் காந்தி பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com